தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த கையோடு பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி, ‘வி தி லீடர்ஸ்’ என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார் அண்ணாமலை. இந்த இயக்கத்தின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை 20 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், இதன் முதல் பிரம்மாண்ட மாநாடு வரும் ஜூலை 12 ஆம் தேதி பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் உள்ள கொங்குசிட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது. ‘போதை இல்லா பொள்ளாச்சி’ என்ற பெயரில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த மாநாட்டுத் திடலுக்கான பந்தல் கால் நடப்பட்டு, ஏற்பாடுகள் தற்போதே தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தனியாக இயக்கம் தொடங்கி அண்ணாமலை நடத்தும் முதல் மாநாடு என்பதால், அரசியல் வட்டாரத்திலும் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த மாநாட்டில் அண்ணாமலையின் அரசியல் பாதை மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு மத்தியில், அவர் தற்போதைய முதல்வர் விஜய்யை நேரடியாக டார்கெட் செய்து பேசத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ள அண்ணாமலை, அதற்கான அடித்தளமாக இந்த மாநாட்டைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்.
அண்ணாமலையின் இந்த பொள்ளாச்சி வியூகம் முழுக்க முழுக்க இளைஞர்களைக் குறிவைத்தே வகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) எதிர்க்கும் இளைஞர்களையும், ஆளும் அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகளையும் தன் பக்கம் இழுப்பதே அவரது முக்கிய நோக்கமாக இருக்கிறது. முன்பு பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோது திமுகவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அக்கட்சியின் வாக்குவங்கியை உயர்த்திய அதே அதிரடி பாணியை, தற்போது தவெக மற்றும் முதல்வர் விஜய்க்கு எதிராகப் பிரயோகிக்க அண்ணாமலை காய் நகர்த்தி வருகிறார்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்ற பிம்பம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத ‘கிளீன் இமேஜ்’ ஆகியவற்றைத் தனது முதன்மை ஆயுதமாக அண்ணாமலை முன்னிறுத்துகிறார். அரசியல் விமர்சகர்களின் கணிப்புப்படி, அண்ணாமலையின் இந்த அதிரடி அரசியல் வருகையானது ஆளும் தவெகவின் வாக்கு வங்கியில் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியிலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜூலை 12-ல் பொள்ளாச்சி மாநாட்டைத் தொடர்ந்து, வரும் ஜூலை 26 ஆம் தேதி திருச்செந்தூரிலும் அடுத்த மாநாட்டை நடத்தித் தனது அரசியல் பலத்தைக் காட்ட அண்ணாமலை தீவிரமாகத் தயாராகி வருகிறார்.
