காதலும் கடந்து போகும், காலா ,விக்ரம் வேதா போன்ற பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். அதன் பின்னர் அவர் ஜெய் பீம் படத்தில் நடித்த ராஜாக்கண்ணு கதாபாத்திரம் அவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு சென்று அவரை ஒரு நடிகராக அங்கீகரிக்க வைத்தது.
மணிகண்டன் நடிகராக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார் . இவர் இயக்கிய “நரை எழுதும் சுய சரிதம்” என்ற திரைப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. அதன்பின்னர் அவர் கதாநாயகனாக நடித்த ‘குட்னைட்’ படம் பெரிய வெற்றியைப் பெற்று அவரைக் கதாநாயகன் ஆக்கியது.
அதன் பின்னர் அவர் நடித்த லவ்வர் திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இப்போது ‘குடும்பஸ்தன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலில் கலக்கி வருகிறது.
மணிகண்டனின் நடிப்பைப் போலவே அவரது நேர்காணல் பேச்சுகளும் பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன. விஷயங்களை, சம்பவங்களை அவர் எடுத்துரைக்கும் பாங்கு ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அவர் ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்த போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில் “காலா படத்தின் போது ரஜினி சார் எல்லோரிடமும் அவர் படங்களில் மிகவும் பிடித்தது எது எனக் கேட்டார். அனைவருமே பாட்ஷா என்றார்கள். நான் ‘அண்ணாமலை’ என்று சொன்னதும், ஏன் உனக்கு மட்டும் அண்ணாமலை என்று கேட்டார். நான் அவரிடம் “சார் பாட்ஷா மிகப்பெரிய ஆளாக இருக்கலாம். ஆனால் அண்ணாமலைதான் மிகப்பெரிய மனிதன்.
பாட்ஷா போராடுவது எதிரியோடு. ஆனால் அண்ணாமலை எதிர்ப்பது அவனது நண்பனைதான். கடைசியில் அவனை என்ன செய்ய முடியும்? அதனால் அண்ணாமலை ஒரு கட்டத்தில் அவனின் சொத்து பத்திரங்களை எல்லாம் அம்மாவிடம் கொடுத்து அவனிடமே கொடுக்க சொல்லிவிடுவான். அந்த இடத்தில் அண்ணாமலை மிகப்பெரிய மனிதன் ஆகிவிடுகிறான்’ என்றேன். அதைக் கேட்டு சிரித்த அவர் “சூப்பர்.. அண்ணாமலை ரொம்ப நல்ல படம்…” என பாராட்டினார்” எனத் தெரிவித்துள்ளார்.
