பாஜக-வில் இருந்து விலகி ‘வீ த லீடர்ஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வரும் அண்ணாமலை, விரைவில் 50 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்த பின் அதை ஓர் அரசியல் கட்சியாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் சர்ச்சைக்குரிய வகையில் போராட்டம் நடத்தி வரும் ‘கரப்பான் பூச்சி கட்சி’யினருக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர் அறிக்கை வெளியிட்டிருப்பது, அவர்தம் அமைப்பிற்குள்ளேயே பலத்த விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.
தேசிய அளவில் உருவெடுத்துள்ள இந்தக் கட்சியின் பின்னணி மற்றும் நிதி ஆதாரம் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் நிலவி வருகின்றன. மேலும், வன்முறை சார்ந்த அவர்களின் செயல்பாடுகள் காரணமாகவே பல அரசியல் இயக்கங்கள் அச்ச அமைப்புடன் வெளிப்படையாகக் கைகோர்க்கத் தயங்குகின்றன. தமிழகத்தில் கூட இக்கட்சியின் போராட்டங்களுக்குத் த.வெ.க அரசு அனுமதி மறுத்து உளவுத்துறை மூலம் கண்காணித்து வரும் நிலையில், முன்னாள் காவல் அதிகாரியான அண்ணாமலை மத்திய அரசைக் கண்டித்துப் பேசியிருப்பது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அண்ணாமலையின் இந்த நகர்வு குறித்து ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது த.வெ.க அரசு எடுக்கும் நடவடிக்கைகளைக் கண்டிக்காத அண்ணாமலை, தேசப் பாதுகாப்பு சார்ந்த விவகாரத்தில் பா.ஜ.க-வை விமர்சிப்பது ஏற்புடையதல்ல என்றும், இந்த அறிக்கை யாரோ ஒருவரால் எழுதிக் கொடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது போலத் தோன்றுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அண்ணாமலை மீதுள்ள தனிப்பட்ட ஈர்ப்பால் பலர் இந்த அமைப்பில் இணைந்திருந்தாலும், அவர்களில் பெரும்பான்மையானோர் தேசிய நலன் சார்ந்த சிந்தனை கொண்டவர்களாகவே இருக்கின்றனர். நாட்டின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக அண்ணாமலை எடுத்திருக்கும் இந்த முடிவு, வீ த லீடர்ஸ் அமைப்பின் கொள்கைப் பாதையில் குழப்பத்தையும், தொண்டர்கள் மத்தியில் பெரும் பிளவையும் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
