“வானதி சீனிவாசனுக்கு ஷாக் கொடுத்த அண்ணாமலை”… கோவையில் உச்சகட்ட டென்ஷன்… முதல் கூட்டத்திலேயே இப்படியா..?

By Nanthini on சித்திரை 6, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கோவை வடக்கு தொகுதியில் பாஜகவின் உட்கட்சிப் பூசல் பகிரங்கமாக வெளிவரத் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள சூழலில், கோவை வடக்கு தொகுதியை குறிவைத்து மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், டெல்லி மேலிடத்தின் ஆசியுடன் வானதி சீனிவாசனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தான் விரும்பிய தொகுதி கிடைக்காத அதிருப்தியில் அண்ணாமலை தரப்பு இருந்த நிலையில், இது தொகுதி பங்கீட்டிற்குப் பிந்தைய மோதலாக உருவெடுத்துள்ளது.

வானதி சீனிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, கோவையில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்பார் என்று வானதி தரப்பில் உறுதியாகக் கூறப்பட்டது. இதனால் அண்ணாமலையின் வருகையை அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், நேற்று கணபதி பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்ற நிலையில், அண்ணாமலை மட்டும் அதில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். இது வானதி ஆதரவாளர்கள் மத்தியிலும், கட்சியின் மேலிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

அண்ணாமலை இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்ததற்குப் பின்னணியில் கடும் அதிருப்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. நேற்று அவர் கோவையிலேயே இருந்தும், மறைந்த கட்சி நிர்வாகியின் தந்தைக்கு அஞ்சலி செலுத்தச் சென்றாரே தவிர, வேட்பாளர் கூட்டத்திற்கு வரவில்லை. சமூக வலைதளங்களில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் வானதி சீனிவாசனுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், தலைவர்களின் இந்த நேரடி மோதல் தேர்தல் பணிகளைப் பாதிக்குமோ என்ற அச்சம் தாமரை கட்சியினரிடையே எழுந்துள்ளது.

   

இந்நிலையில், இன்று காலை வானதி சீனிவாசன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளார். இந்த முக்கிய நிகழ்விலாவது அண்ணாமலை கலந்துகொண்டு ஒற்றுமையை நிலைநாட்டுவாரா அல்லது தனது எதிர்ப்பைத் தொடர்வாரா என்பதே அரசியல் நோக்கர்களின் தற்போதைய கேள்வியாக உள்ளது. கோவையில் நிலவும் இந்த “ஈகோ” யுத்தம், தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.