தூத்துக்குடியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு மற்றும் அதன் முதல்வர் விஜய் மீது மிகக் கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அமலாக்கத்துறை விசாரணை தன்னை எந்த வகையிலும் நெருக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், தற்போதைய தவெக அரசின் பின்னணியில் லாட்டரி மார்ட்டின் குடும்பத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா தான் உண்மையான ஆளுமையாகச் செயல்பட்டு வருவதாக அதிரடியான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், “புதிதாக ஆரம்பிக்கப்பட்டு ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை ஓரங்கட்டிவிட்டு, லாட்டரி சீட்டு கும்பலாக இருக்கிற ஆதவ் அர்ஜுனா தான் அந்த கட்சியை முழுமையாகக் கைப்பற்றப் போகிறாரா என்று தவெக தொண்டர்களே பேசிக் கொள்கிறார்கள். லாட்டரி சீட்டு மூலம் கிடைத்த பணத்தைத் தமிழகத்தில் ஊடுருவ விட்டு, பொம்மையாக ஒருவரை முன்னிறுத்திவிட்டுப் பின்னணியில் இருந்து ஆட்சி நடத்தலாம் என்று கனவு காண்கிறார்கள். தவெக தொண்டர்கள் இந்த விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்” என்று எச்சரித்தார்.
தொடர்ந்து தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், “இன்றைக்குத் தமிழக முதல்வர் விஜய் வருகிறார், போகிறார். ஆனால், அரசிடமிருந்து வரும் முக்கிய அறிக்கைகள் அனைத்தும் ஆதவ் அர்ஜுனா என்ற லாட்டரி கும்பல் மூலமாகத்தான் வருகிறது. தனது பணத்தை எல்லாம் தமிழகத்தில் இறைத்துவிட்டு, இங்கு மீண்டும் லாட்டரி விற்பனையைக் கொண்டு வந்துவிடுவார்களோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது. கோவை, சென்னை உட்படத் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையும், லாட்டரி சீட்டு விற்பனையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அனைத்தும் நடக்கும் வேளையில் இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கிறதா?” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மேலும், தவெக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று சாடிய அவர், “மாதம் 2500 ரூபாய் தருவதாகக் கூறினார்கள், தரவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த பிறகுதான் 1000 ரூபாயாவது கொடுத்தார்கள். மீனவர்களுக்கு 20,000 ரூபாய், பெண்களுக்குப் பேருந்துகளில் இலவச பயணம், தாய்மாமன் சீர் எனப் பொய் வாக்குறுதிகளைக் கூறி மக்களை ஏமாற்றியுள்ளனர்; இதற்கு அவர்கள் சட்டமன்றத்தில் பதிலளிக்க வேண்டும்” என்றார். இறுதியாக, தன் மீதான அமலாக்கத்துறை வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்து கவலைப்படவில்லை என்றும், தவெக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறி அவர்களுக்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
