தமிழக வெற்றிக் கழகத்தின் சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ ஈ.சி.ஆர். சரவணன், தொகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் வைக்கும் போஸ்டர்கள் மற்றும் பேனர்களால் மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. விஜய் ரசிகர் மன்றக் காலம் முதலே தீவிரமாகச் செயல்பட்டு வரும் இவர், விளம்பர உத்திகளுக்குப் பெயர் பெற்றவர். தமிழகத்திலேயே மிகப்பெரிய தொகுதியான சோழிங்கநல்லூரில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றும், கட்சித் தலைமை தமக்கு உரிய அங்கீகாரத்தையோ அமைச்சர் பதவியையோ வழங்கவில்லை என்ற ஆதங்கத்தில் அவர் புஸ்ஸி ஆனந்திடம் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது.
வரவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் எப்படியாவது இடம்பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில், பனையூர் மற்றும் நீலாங்கரையிலிருந்து திருவான்மியூர் வரை கட்சித் தலைவர் விஜய்யின் பார்வையில் படும் வகையில் சரவணன் தொடர்ச்சியாக பேனர்களையும் விளம்பர போஸ்டர்களையும் குவித்து வருகிறார். பொதுமக்கள் நடமாட்டத்திற்கும் போக்குவரத்துக்கும் இடையூறாகத் தலைகாட்டும் இந்த போஸ்டர் அட்டகாசம், தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களோ போஸ்டர்களோ அடிக்கக் கூடாது என தவெக தலைமை கண்டிப்பான உத்தரவு பிறப்பித்த நிலையிலும், அதை சற்றும் பொருட்படுத்தாமல் சரவணன் செயல்படுவது சொந்தக் கட்சியினரையே பெரும் கொந்தளிப்பிற்கு ஆளாக்கியுள்ளது. குறிப்பாக, பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில் கதவு முழுவதையும் சினிமா போஸ்டர்களைப் போல சரவணனின் போஸ்டர்கள் ஆக்கிரமித்துள்ளன. கிழித்தெறிந்தாலும் மீண்டும் மீண்டும் ஒட்டப்படும் இந்த நடவடிக்கையைக் கண்டு தவெக தொண்டர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்கள் பலரும் சரவணனை நேரடியாகக் குறிப்பிட்டுத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். “கட்சித் தலைமையின் பேச்சைக் கேட்காமல் தொடர்ச்சியாக விதிமீறலில் ஈடுபடும் இவரை ‘வழக்கமான குற்றவாளி’ (Habitual Offender) என்றுதான் குறிப்பிட வேண்டும்; மாற்று அரசியல் பேசுவதாகக் கூறிக்கொண்டு இன்னும் ரசிகர் மன்ற நிர்வாகி போல நடப்பது தகுதியற்ற செயல்” என எக்ஸ் தளத்தில் தவெகவினரே சரவணனைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தொகுதியில் குடிநீர் பற்றாக்குறை, சீரற்ற மின் விநியோகம், குப்பைகள் அள்ளப்படாதது மற்றும் மோசமான சாலைகள் எனப் பல அடிப்படைப் பிரச்சினைகள் நிலுவையில் உள்ளபோது, அவற்றைக் கண்டுகொள்ளாமல் போஸ்டர் அடிப்பது மற்றும் துக்க நிகழ்வுகளுக்குச் சென்றதை BGM போட்டு ரீல்ஸ் செய்வதிலேயே எம்.எல்.ஏ கவனம் செலுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மக்கள் நலனைப் புறக்கணித்துத் தலைமையின் கவனத்தை ஈர்க்க மட்டுமே முயலும் ஈசிஆர் சரவணன் மீது கட்சித் தலைமை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தவெக தொண்டர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
