தவெக தலைவர் விஜய், தன்னை அரசியல் பிரச்சாரத்திற்கு அழைத்தாலும் போக மாட்டேன் என்றும், இதைத் தான் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பிலேயே அவரிடம் சொல்லிவிட்டதாகவும் நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பேராசிரியராக ஆண்ட்ரியா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஆண்ட்ரியா, விஜய் சினிமாவில் இருந்து விலகுவது தனக்கு வருத்தமாக இருப்பதாகவும், அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கூறியுள்ளார். மேலும், ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின்போது விஜய் பெரிய ஸ்டாராக இருந்தபோதிலும், பந்தா இல்லாமல், எளிமையாக அனைவரையும் அணுகக்கூடிய நல்ல மனிதராகப் பழகினார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
“மாஸ்டர்” ஷூட்டிங் நேரத்தில் விஜய் தன்னிடம் அரசியலில் ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டதாகவும், தான் ‘இல்லை’ என்று பதிலளித்ததாகவும் ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். அப்போது அவர் அரசியலில் களமிறங்குவார் என்று தான் நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
குறிப்பாக, “பிரச்சாரத்திற்கு விஜய் உங்களை அழைத்தால் போவீர்களா?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஐய்யய்யோ.. நான் போக மாட்டேன், அதை ‘மாஸ்டர்’ படப்பிடிப்பிலேயே அவரிடம் சொல்லிவிட்டேன்” என்று ஆண்ட்ரியா அளித்த பதில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
