தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசு அமைந்துள்ள சூழலில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ-க்களைப் பதவி விலகச் செய்து, தவெகவில் இணைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை மற்றும் பெரும் மோசடி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாகச் சாடியுள்ளார். ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் விஜய்யை முதலமைச்சராக வெற்றி பெற வைத்த கோடிக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கைக்கு தவெகவின் இந்த நடவடிக்கை முற்றிலும் துரோகம் இழைப்பதாக அமைந்துள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுராந்தகம், பெருந்துரை, தாராபுரம் போன்ற தொகுதிகளில் பாமகவின் கடுமையான உழைப்பால் உருவான எம்.எல்.ஏ-க்களை ஆசை காட்டி ராஜினாமா செய்ய வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அன்புமணி ராமதாஸ், வாக்களித்த மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்றும், பதவி விலகியவர்கள் இனி தொகுதிக்குள் செல்ல முடியாது என்றும் எச்சரித்துள்ளார். மேலும், தமிழகத்தில் இடைத்தேர்தல் வந்தால் ஆளும் தவெகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொது வேட்பாளர்களை நிறுத்தி அவர்களைப் படுதோல்வி அடையச் செய்வோம் என்றும், எங்களை அந்த நிலைக்குத் தள்ள வேண்டாம் என்றும் தவெக அரசுக்கு அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளையில், தவெக அரசின் விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் ஆய்வுகள் போன்ற சில ஆரம்பகட்ட திட்டங்களை அவர் வரவேற்றுள்ளார். முதல்வர் விஜய் வழங்கியுள்ள சாதி வாரியான சமூக நீதி கணக்கெடுப்பு, டாஸ்மாக் மூடல், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற வாக்குறுதிகள் பாமகவின் கொள்கைகளோடு ஒத்துப்போவதால், தவெக அரசுக்குச் சில காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்றும், மக்களின் நலனைக் கருதி சட்டப்பேரவை வாக்கெடுப்பில் பாமக கண்மூடித்தனமாக எதிர்க்காமல் நடுநிலை வகித்தது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
