பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 2026-27 நிதியாண்டிற்கான பாமகவின் 24-வது நிழல் வரவு செலவுத் திட்டத்தை சென்னையில் வெளியிட்டார். இந்நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தின் வருவாய் வரவுகள் ரூ.6,71,891 கோடியாக இருக்கும் எனவும், கனிம வளங்களை முறையாகக் கையாள்வதன் மூலம் வரி அல்லாத வருவாயாக ரூ.2,17,945 கோடி ஈட்ட முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், மாநிலத்தில் உள்ள மதுக்கடைகள் மற்றும் பீர் தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும், பார்களை அதிகரிப்பது குறித்து அரசு ஆலோசிப்பது தவறான அணுகுமுறை என்றும் அவர் வலியுறுத்தினார்.
திமுக ஆட்சிக் காலத்தில் கனிம வளம், நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறைகளில் நடந்த ஊழல்கள் மூலம் சுருட்டப்பட்ட நிதியை மீட்டு அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழக அரசை அவர் கேட்டுக்கொண்டார். ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க டிஜிபி தரத்திலான அதிகாரி தலைமையில் தனிப் பிரிவு அமைக்கப்பட வேண்டும் எனவும், 5 சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். லோக் ஆயுக்தா அமைப்பிற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கி, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆண்டுதோறும் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மதுரை மற்றும் கோவை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதற்குக் கண்டனம் தெரிவித்த அன்புமணி ராமதாஸ், நகர்ப்புற மக்கள்தொகையை மட்டும் கணக்கில் கொள்ளாமல் தினசரி வந்து செல்லும் மிதக்கும் மக்கள்தொகையையும் கணக்கிட வேண்டும் என்றார். இத்திட்டத்தைக் கொண்டு வர தமிழக அரசு மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும் என்றும், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே நுழைவுத் தேர்வு போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் எனத் தெளிவுபடுத்தினார்.
திமுகவிற்கு மாற்றாகவே மக்கள் தவெகவிற்கு வாய்ப்பளித்துள்ளனர் எனக் குறிப்பிட்ட அவர், ஆரம்பத்தில் ஊழலுக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்ட புதிய அரசு, தற்போது மெத்தனமாகவும் வேகம் குறைந்தும் காணப்படுவதாக விமர்சித்தார். “இளைஞர்கள் உங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; மக்களின் நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்” என்று தவெக அரசிற்கு எச்சரிக்கை விடுத்த அன்புமணி, ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகளையும் தனிநபர்களையும் கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைளை விரைவுபடுத்த பாமக அழுத்தம் கொடுக்கும் என்றும் உறுதியளித்தார்.
