அதிமுகவின் வெற்றிக்கு பாமக தான் முக்கிய காரணம்…. தமிழகத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி…. அன்புமணி ராமதாஸின் அதிரடி அறிக்கை…!!

By Devi Ramu on ஆடி 12, 2026

Spread the love

பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தொடங்கி 37 ஆண்டுகள் நிறைவடைந்து 38-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசியலில் பாமகவின் பங்கு மற்றும் சாதனைகளை விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதிகாரத்தை அடைவது மட்டுமே ஒரு கட்சியின் வெற்றியல்ல என்றும், எதிர்க்கட்சியாக இருந்தபடியே மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுங்கட்சியினரை எடுக்க வைப்பதே உண்மையான வெற்றி என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், கல்வி, வேலைவாய்ப்பு, நீர்ப்பாசனம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழக மக்களின் உரிமைகளை மீட்டெடுத்ததில் பாமகவின் பங்கை யாரும் மறுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற 2026 சட்டசபைத் தேர்தலில் வீசிய எதிர்பாராத அலையிலும் பாமக 4 இடங்களைச் சிறப்பாகக் கைப்பற்றியதுடன், தனது கூட்டணியைச் சேர்ந்த அதிமுகவின் சுமார் 35 தொகுதிகளின் வெற்றிக்கும் முக்கியக் காரணமாக அமைந்ததாக அன்புமணி ராமதாஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், பாமகவின் 46 கால நீண்டகாலக் கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பைத் தமிழ்நாட்டில் நடத்துவதற்குத் தற்போதைய ஆளுங்கட்சியைச் சம்மதிக்க வைத்து, அதனை ஆளுநர் உரையில் இடம்பெறச் செய்ததை மிகப்பெரிய சாதனையாக அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவர் ராமதாஸ் வகுத்த பாதையில் சமூக நீதிக்கான பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம் எனத் தொண்டர்களுக்கு அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.