2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சௌமியா அன்புமணி போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு நூலிழையில் வெற்றியைத் தவறவிட்ட அவர், இந்த முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, தங்களுக்குச் சாதகமான தொகுதிகளை அடையாளம் கண்டு வரும் நிலையில், சௌமியா அன்புமணியின் வருகை அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சௌமியா அன்புமணி போட்டியிடுவதற்காக தர்மபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம் அல்லது பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இரு தொகுதிகள் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில் வன்னியர் சமூகத்தினர் அதிகளவில் வசிக்கும் இந்தத் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடுவது அவருக்குப் பலமாக அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. தற்போது வரை இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்த பிறகு இது குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
