தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். நல்லம்பள்ளி ஒன்றியத்தில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து உரையாற்றிய அவர், “இது நாடாளுமன்றத் தேர்தல் அல்ல, எடப்பாடி பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும் இடையிலான சட்டமன்றத் தேர்தல் போட்டி; இதில் பாமக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவார்” என்று அதிரடியாகக் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் ஜி.கே.மணி குறித்துப் பேசியதற்குப் பதிலடி கொடுத்த அன்புமணி, “ஜி.கே.மணி அய்யாவின் (ராமதாஸ்) வலது கரமல்ல; அவர் ஸ்டாலினுடைய வலது கரம், உதயநிதி ஸ்டாலினின் வலது கரம். துரோகிகள் அவர்களைப் பற்றிப் பேசக் கூடாது” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், ஸ்டாலின் அந்தந்தப் பகுதிகளுக்குச் செல்லும்போது அங்குள்ள மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப வேடம் போடுவதாக விமர்சித்த அவர், தர்மபுரிக்கு வந்தால் மட்டும் வன்னியர்களைப் பற்றிப் பேசுவது திமுகவின் ரத்தத்தில் ஊறிய அரசியல் தந்திரம் என்று சாடினார்.
தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சி குறித்துப் பேசிய அன்புமணி, கடந்த 79 ஆண்டுகளில் தர்மபுரி தொகுதியில் ஒரு பெண் கூட சட்டமன்ற உறுப்பினராக வரவில்லை என்ற குறையைச் சுட்டிக்காட்டினார். சௌமியா அன்புமணி சட்டமன்றத்திற்குச் சென்றால் பெண்களின் பாதுகாப்புக்காகக் குரல் கொடுப்பார் என்று உறுதி அளித்த அவர், மாவட்டத்தின் சிப்காட் திட்டத்தில் ஒரு தொழிற்சாலை கூட வரவில்லை என்றும், அங்கு வெறும் கற்கள் மட்டுமே மிஞ்சியுள்ளன என்றும் ஒரு கல்லை எடுத்துக்காட்டி விமர்சனம் செய்தார்.
திமுக அரசு மக்களைப் படிக்க வைக்காமல் குடிக்க வைப்பதிலேயே குறியாக இருப்பதாகக் குற்றம் சாட்டிய அன்புமணி, கடந்த ஓராண்டில் மட்டும் தர்மபுரி மக்கள் 3000 கோடி ரூபாய்க்கு மது அருந்தியுள்ளதாகப் புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்டாரார். திமுகவை ஒரு கொடுங்கோல் ஆட்சி என்று வர்ணித்த அவர், இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும் என்றும், ஐந்து தொகுதிகளிலும் அவர்களுக்குப் பூஜ்ஜியம் தான் கிடைக்க வேண்டும் என்றும் வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
