மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுத்து வரும் முடிவுகள் மாநிலத்தின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறி, பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். கர்நாடக அரசுடன் எந்தவித பேச்சுவார்த்தையிலும் தமிழக அரசு ஈடுபடக் கூடாது என வலியுறுத்தியுள்ள அவர், வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மேகதாது அணை குறித்து விவாதிக்க முதலமைச்சர் விஜய் கர்நாடகம் செல்லவிருப்பதாகக் கூறப்படும் தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசின் அழைப்பை ஏற்று அம்மாநிலத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் செல்வது, வரலாற்றுச் சிறப்புமிக்க காவிரி உரிமையை கர்நாடகத்திடம் முற்றிலுமாகத் தாரைவார்ப்பதற்குச் சமம் என அன்புமணி எச்சரித்துள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது என்பது இரு மாநிலங்களுக்கு இடையிலான பொதுவான பிரச்சினை அல்ல; மாறாக அது கர்நாடகாவின் ஒருதலைப்பட்சமான சட்டவிரோதக் கோரிக்கை மட்டுமே என்பதால், அம்மாநில அரசுடன் தமிழக அரசு எந்தகைய ஆலோசனையையும் நடத்த வேண்டிய அவசியமில்லை என்பதில் பா.ம.க உறுதியாக உள்ளது.
ஒருவேளை தமிழக அரசு மேகதாது குறித்து கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், அது இந்த விவகாரத்தை இருதரப்பு பிரச்சினையாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு வழிவகுத்துவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு நிகழும் பட்சத்தில், “அணையைக் கட்டக்கூடாது” என்ற நமது முதன்மை நிலைப்பாடு மாறி, “அணையின் கொள்ளளவு எவ்வளவு இருக்க வேண்டும்?” என்ற பேச்சுகளுக்கே முக்கியத்துவம் தரப்படும் சூழல் உருவாகும். இது தமிழகத்திற்கு மீள முடியாத மிக மோசமான பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
எனவே, விவசாய அமைப்புகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுப்பதை விடுத்து, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். மேலும், முதலமைச்சர் விஜய் கர்நாடகம் செல்லும் முடிவைக் கைவிட்டு, உச்சநீதிமன்றம் வாயிலாகச் சட்டப் போராட்டங்களை தீவிரப்படுத்தி, மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் திட்டத்தை முற்றிலும் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கோரியுள்ளார்.
