தமிழக அரசியலில் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் சமீபத்திய பேச்சுக்கள் பெரும் அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. “வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை வழங்க ஸ்டாலின் தயாராகவே இருந்தார்; ஆனால் சில மூத்த அமைச்சர்கள்தான் அதைத் தடுத்தனர்” என பாமக பொதுக்கூட்டத்தில் அவர் பேசியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வரும் அன்புமணி, இம்முறை முதலமைச்சரின் எண்ணத்திற்குச் சாதகமாகப் பேசியிருப்பது, பாமக தொண்டர்களை அடுத்தகட்ட அரசியல் மாற்றத்திற்குத் தயார்படுத்தும் முதற்கட்ட முயற்சியோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் ஆதரவு நிலைப்பாட்டை பாமக இன்னும் அறிவிக்காததும், அதிமுக உடனான அதன் கூட்டணியில் நிலவும் தொய்வும் இக்கணிப்புகளுக்கு மேலும் வலு சேர்க்கின்றன. அதிமுக கூட்டணியில் இணைந்த பிறகு பாமக குறிப்பிடத்தகுந்த வெற்றிகளையோ அல்லது மத்திய அமைச்சரவையில் எதிர்பார்த்த வாய்ப்புகளையோ பெறவில்லை. இன்னொருபுறம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையுடன் அன்புமணி மற்றும் சௌமியா அன்புமணி ஆகியோர் இணக்கமான போக்கைக் காட்டி வந்தபோதிலும், அங்கு விசிக வலுவான கூட்டணியில் அங்கம் வகிப்பதால் தவெக- பாமக கூட்டணி அமைவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.
வட மாவட்டங்களில் மீண்டும் தனது செல்வாக்கை வலுப்படுத்தத் துடிக்கும் திமுக, பாமகவை தங்கள் பக்கம் இழுக்கத் தீவிரமாகக் காய் நகர்த்தி வருகிறது. ‘விசிக இருக்கும் கூட்டணியில் பாமக இடம்பெறாது’ என்ற அரசியல் சூழலுக்கு மத்தியில், பாமகவை உள்ளே கொண்டு வர திமுக தலைமை அமைதியாகப் பேச்சுவார்த்த நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அன்புமணி தரப்பு இதுவரை எந்தவொரு இறுதி முடிவையும் வெளிப்படையாக அறிவிக்காமல் சூழலைக் கூர்ந்து கவனித்து வருகிறது.
அமைச்சர்களின் எதிர்ப்பால்தான் 10.5% இடஒதுக்கீடு தடைபட்டது என்ற அன்புமணியின் கூற்று, திமுக தலைமை மீதான பிம்பத்தைச் சீரமைப்பது போல் அமைந்துள்ளதால், கூட்டணி மாற்றத்திற்கான பாலம் ஏற்கனவே அமைக்கப்பட்டுவிட்டதாகவே விவரமறிந்தவர்கள் கருதுகின்றனர். எதிர்வரும் நாட்களில் கூட்டணி குறித்த பாமகவின் இறுதி முடிவு, வட மாவட்ட அரசியல் சமன்பாடுகளையும் தமிழகத்தின் தேர்தல் களத்தையும் கணிசமாக மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
