தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள விஜயின் தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகின்றது. குறிப்பாக அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையனின் வருகைக்குப் பிறகு கட்சியில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் விஜய் தலைமையில் மெகா கூட்டணி உருவாகும் என அரசியல் ஆர்வலர்கள் பலரும் கூறி வருகின்றனர். இதனிடையே பாமக இரண்டாக பிரிந்து இருக்கும் பட்சத்தில் அன்புமணி அதிமுக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் தன்னுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்த செங்கோட்டையன், பாமகவின் ஒரு அணியாவது தமிழக வெற்றி கழகம் கட்சியில் சேர்ந்தால் இபிஎஸ் ஐ தோற்கடிக்க முடியும் என்ற விஜய்க்கு அறிவுரை கூறியுள்ளாராம். இதனால் முதலில் அதிமுக பக்கம் இருக்கும் அன்புமணியை விஜய் கட்சியில் சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. ஆரம்பத்தில் இருந்தே விஜய்க்கு அன்புமணி ஆதரவு தெரிவித்து வருவதால் அவர் எளிதில் விஜய் கட்சியில் சேர்ந்து விடுவார் என தெரிகிறது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் முதல் கட்சியாக பாமக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றி கழகம் தலைவர்களை பாமக பாலு சந்தித்தபோது கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாம். அப்போது தமிழக வெற்றி கழகம் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அதிகாரத்தில் பங்கு தரப்படும் என பாமகவுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளதாம். ஒருவேளை இரு கட்சிகளும் கூட்டணி வைத்தால் வடமாவட்டங்களில் 2026 இல் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
