தமிழகத்தில் உள்ள 1100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். தகுதியான ஆசிரியர்கள் இருந்தும், கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த இடங்களை நிரப்பத் திமுக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. குறிப்பாக, 800 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாததால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், பள்ளிகளின் நிர்வாகம் சீர்குலைந்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
ஆசிரியர்களின் பதவி உயர்வு தொடர்பான நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், தமிழக அரசு நினைத்தால் அவற்றை விரைந்து முடித்து ஒரு அரசாணை மூலம் இந்தப் பணியிடங்களை நிரப்பியிருக்க முடியும். கல்வித் துறையில் நிலவும் இத்தகைய பின்னடைவுகளைக் கவனிக்காமல், ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ எனக் கொண்டாடுவது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அவர் விமர்சித்துள்ளார். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைய இதுவே முக்கியக் காரணம் எனவும், இதற்கு மக்கள் வரும் தேர்தலில் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
