தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் பாமகவில் யார் கையில் அதிகாரம் உள்ளது என்று தெரியாத நிலைமை தான் தற்போது நீடிக்கிறது. தந்தை மகனின் சண்டை டெல்லி உயர்நீதிமன்றம் வரை சென்று அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தன்னுடைய பேரன் முகுந்தனை இளைஞரணி தலைவர் பதவியில் அமர்த்தியதை விரும்பாத அன்புமணி அதனை மேடையிலேயே வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து பல பிரச்சனைகள் அரங்கேற தன்னுடைய மகள் காந்திமதியை கட்சியின் செயல் தலைவர் பதவியில் ராமதாஸ் அமர்த்தினார். இது அன்புமணிக்கு ராமதாஸ் உடனான மோதலை மேலும் அதிகப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கினார். இதனை தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட அன்புமணிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை சட்டரீதியாக எதிர்கொள்ள ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதனை விசாரித்த நீதிமன்றம் பாமகவில் யார் தலைவர் என்பதில் குளறுபடிகள் இருப்பதால் தேர்தல் நேரத்தில் வேட்புமணியில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனையும் வரும். இதனால் பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுகிறது என தீர்ப்பு வழங்கியது. இப்படி இருக்கையில் பாமக யாருடன் கூட்டணி என்பதில் ஒரு தெளிவான முடிவு இல்லை. ராமதாஸ் திமுக பக்கமும் அன்புமணி அதிமுக பக்கமும் தன்னுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
ராமதாஸ் கூட்டணி தொடர்பாக எந்த ஒரு முயற்சியையும் எடுக்காத நிலையில் அன்புமணி ராமதாசுடன் பேசி வருகின்றார். இதனை அறிந்த ராமதாஸ் தரப்பை சேர்ந்த பாமக மேற்கு சட்டமன்ற உறுப்பினரான அருள் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ராமதாஸ் தான் உண்மையான பாமக. வேறு யாரும் யாருடன் கூட்டணி குறித்து பேசி ஏமாற வேண்டாம் என்று கூறியுள்ளார். இவருடைய இந்த கருத்து அதிமுகவுடன் அன்புமணி எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் ராமதாஸ் முடிவு தான் இறுதியானது என்பதை கூறுகிறது. மேலும் ஏமாற வேண்டாம் என்று அவர் கூறியதால் ராமதாஸ் அதிமுகவை தவிர்த்து வேறு கட்சியுடன் கூட்டணி அமைப்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.
