“விஜய் கூட ஆறுதல் சொல்லல.. ஆனா அமைச்சர் அன்பில் மகேஷ் செய்த நெகிழ்ச்சி”… தஞ்சையில் வைரலாகும் அந்தச் சந்திப்பு….!

By Nanthini on பங்குனி 9, 2026

Spread the love

தஞ்சாவூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயைக் காணச் சென்றபோது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கல்லூரி மாணவர் விக்னேஷை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். விக்னேஷ் மற்றும் ஆரோன் ஆகிய இரு இளைஞர்கள், விஜயினுடைய வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். இதில் விக்னேஷிற்குத் தலையில் பலத்த காயமும், மற்றொருவருக்கு இடுப்பு எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.

விபத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட மாணவர்களிடமோ அல்லது அவர்களது குடும்பத்தினரிடமோ நடிகர் விஜய் எந்தவிதமான ஆறுதலோ அல்லது விசாரணையோ மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், நாகை மாவட்டத்திற்குச் செல்லும் வழியில் தஞ்சாவூர் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ், விபத்து குறித்த தகவல் அறிந்து நேரடியாக மருத்துவமனைக்கே சென்று மாணவர்களைச் சந்தித்தார்.

   

சிகிச்சை பெற்று வரும் மாணவனின் குடும்பத்தினருக்குத் தைரியம் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “மருத்துவச் செலவைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், அத்தனையையும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று உறுதியளித்துள்ளார். அமைச்சர் இத்தகைய மனிதாபிமானத்துடன் செயல்பட்டது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குப் பெரும் ஆறுதலை அளித்துள்ளதுடன், அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

அரசியல் களத்தில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒரு விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்களைத் தேடிச் சென்று அமைச்சர் ஆறுதல் கூறியது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அதே வேளையில், தவெக தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் உயிரிழந்த மற்றும் காயமடைந்த சம்பவங்களுக்கு நடிகர் விஜய் இதுவரையிலும் பெரிய அளவில் பொறுப்பேற்காமல் இருப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.