குருகிராம் போன்ற பெருநகரங்களில் ரியல் எஸ்டேட் விலைகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டும் ரெடிட் பதிவு ஒன்று இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஐஐஎம் பெங்களூருவில் பயின்ற உயர் அதிகாரி ஒருவர், ஆண்டுக்கு 1.2 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியும் தன்னால் ஒரு நல்ல வீட்டை வாங்க முடியவில்லை எனத் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
40 வயதான அவரிடம் 7 கோடி ரூபாய் சேமிப்பு இருந்தும், அவர் விரும்பும் பகுதிகளில் ஒரு வீட்டின் விலை 14 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதால், வாழ்நாள் முழுவதும் கடன் சுமையோடு வாழத் தான் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அடிப்படை வசதிகள் மற்றும் தரமான கட்டுமானங்கள் இல்லாத வீடுகளுக்குக் கூட பல கோடிகள் விலை நிர்ணயம் செய்யப்படுவதை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தப் பதிவைப் பார்த்த மற்ற பயனர்கள், பெருநகர மோகத்தைக் கைவிட்டு இரண்டாம் நிலை நகரங்களுக்குச் சென்றால் குறைந்த செலவில் சொகுசான வாழ்க்கை வாழ முடியும் என ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமன்றி, கோடிகளில் சம்பாதிக்கும் உயர் அதிகாரிகளுக்கே குருகிராமில் வீடு என்பது எட்டாக்கனியாக மாறியுள்ள யதார்த்தத்தை இந்தப் பதிவு அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டியுள்ளது.
