பெங்களூரைச் சேர்ந்த உள்ளடக்க உருவாக்குநரான (Content Creator) சையத் அஃப்ரீன்ஸ், பெங்களூரு நகரின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “யாராவது ஒருவர் பெங்களூரு நகருக்கு வந்து வெறும் 6 மாதங்கள் தங்கியிருந்தால் போதும், அவர்கள் முழுமையான பெங்களூருவாசியாக மாறிவிடுவார்கள்” என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பெங்களூரு வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களை வரிசைப்படுத்திய அவர், “இங்கு வந்த 6 மாதங்களில், பெங்களூருவின் கடுமையான போக்குவரத்து நெரிசலை (Traffic) நீங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப் பழகிவிடுவீர்கள். அறிமுகமே இல்லாதவர்களைக் கூட ‘ப்ரோ’ (Bro) என்று அழைக்கத் தொடங்குவீர்கள். அதுமட்டுமில்லாமல், ஒரு காபிக்கு 300 ரூபாய் செலவழிப்பது உங்களுக்கு மிகவும் சாதாரணமான ஒன்றாகத் தோன்றும்” என்று நகைச்சுவையுடன் விவரித்துள்ளார்.
View this post on Instagram
மேலும், பெங்களூருவின் கணிக்க முடியாத வானிலையைக் கொண்டாடும் விதமாக, மழை பெய்யும்போது “என்ன ஒரு அருமையான வானிலை” என்று ரசித்துப் பேசவும் பழகிக்கொள்வீர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். “பெங்களூரு என் காதல், இது உங்களை இருகரம் கூப்பி வரவேற்கும்” என்று பதிவிட்டுள்ள அவரது இந்த வீடியோவிற்கு, பெங்களூருவில் வசிக்கும் பலரும் தங்களது அனுபவங்களை கமெண்ட்டுகளில் பகிர்ந்து வருகின்றனர்.
