இந்தியாவில் உள்ள சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களிடமும் “உங்களுக்கு பிடித்த சாக்லேட் என்ன?” என்று கேட்டால் அதில் பெரும்பாலானவர்கள் டைரி மில்க் என்றுதான் பதில் கூறுவார்கள். இவ்வாறு சாக்லேட் விரும்பிகளால் அதிகமாக விரும்பப்படும் டைரி மில்க் சாக்லேட்டை கேட்பரி என்ற நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.
கேட்பரி நிறுவனம் டைரி மில்க் மட்டுமல்லாது 5 ஸ்டார், போர்ன்வில்லே போன்ற சாக்லேட்டுகளையும் தயாரித்து வருகிறது. அதுபோக பூஸ்ட், போர்ன்வீட்டா போன்ற பானங்களையும் தயாரித்து வருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு சாக்லேட்டுகளை வியாபாரம் செய்து தற்போது மிக முக்கியமான உணவு நிறுவனமாக திகழ்ந்து வருகிறது கேட்பரி.
இந்த கேட்பரி நிறுவனம் 1824 ஆம் ஆண்டு ஜான் கேட்பரி என்ற இங்கிலாந்துகாரரால் தொடங்கப்பட்டது. அதன் பின் அவரது சந்ததிகள் கேட்பரி கம்பெனியை படிபடியாக வெவ்வேறு தளங்களுக்கு முன்னேற்றினார்கள்.
இவ்வாறு மிக முக்கியமான சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான கேட்பரி குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் பகிரப்பட்டு வருகிறது. அதாவது இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்த பொது மக்கள் பலரும் மது போதைக்கு அடிமையாகி வந்தார்களாம். அவர்களை திசை மாற்ற ஹாட் சாக்லேட் என்ற பானத்தை அறிமுகம் செய்தார்களாம் கேட்பரி நிறுவனம். அவ்வாறுதான் கேட்பரி என்ற நிறுவனமே சந்தைக்குள் நுழைந்தார்களாம்.
அதே போல் கேட்பரி நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய தயாரிப்புகளை அதிகளவு விற்க ஒரு திட்டம் தீட்டினார்களாம். அதாவது இந்தியாவில் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. அந்த பண்டிகைகளில் சாக்லேட் சாப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற விளம்பர வாசகங்களை இந்திய மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தார்களாம். அவ்வாறு உருவானதுதான் கேட்பரி டைரி மில்க் சாக்லேட் என்று கூறப்படுகிறது. “ஸ்வீட் எடு கொண்டாடு” என்று பண்டிகை நாட்களில் தொலைக்காட்சியில் பல விளம்பரங்களை நாம் பார்த்திருப்போம். இவ்வாறு இந்தியாவில் அதிகளவு வாடிக்கையாளர்களை தனது மார்க்கெடிங் மூலம் வளைத்துப்போட்டிருக்கிறது கேட்பரி.