தமிழ்நாட்டு அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் பாட்டாளி மக்கள் கட்சி, வரும் ஜூலை 16-ஆம் தேதியுடன் 37 ஆண்டுகளை நிறைவு செய்து 38-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடந்த 1989-ஆம் ஆண்டு நிறுவனர் ராமதாஸால் தொடங்கப்பட்ட இக்கட்சி, சமூக நீதி, மது ஒழிப்பு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து போராடி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் மக்களின் 6 முக்கிய இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்து, அரசு இயந்திரத்தை இயங்கச் செய்ததே பாமகவின் உண்மையான வெற்றி என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எதிர்பாராத அலையினால் மாறினாலும், பாமக கூட்டணி வலுவாக இருந்த பகுதிகளில் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிக்குக் காரணமாக இருந்ததாக அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும், சாதிவாரி சர்வேக்கான அறிவிப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மேகேதாட்டு அணைக்கு எதிரான விழிப்புணர்வுப் பயணம் போன்ற பாமகவின் தொடர் அழுத்தங்களால் தற்போதைய அரசு பல மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருவதை அவர் பட்டியலிட்டுள்ளார். ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்காகக் களத்தில் நின்று போராடுவதில் பாமக என்றும் உண்மையான எதிர்க்கட்சியாகவே திகழ்கிறது என்பதை அவர் இந்த அறிக்கையின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த அறிக்கையின் மிக முக்கியமான அம்சமாகப் பார்க்கப்படுவது, பாமகவின் எதிர்கால அரசியல் நகர்வு குறித்த சூசகமான அறிவிப்புதான். “மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் நிலையிலேயே தொடர முடியாது; மக்களின் தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொடுக்கும் அதிகார நிலையை எட்ட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது, எதிர்வரும் அரசியல் சூழலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான கூட்டணி ஆட்சியில் பாமக இடம்பெறுவதற்கான மறைமுகமான சிக்னல் என்று அரசியல் விமர்சகர்களால் உற்றுநோக்கப்படுகிறது. பாமகவின் இந்த 38-ஆம் ஆண்டு தொடக்கம், அக்கட்சியின் ஆட்சி அதிகாரப் பங்கீட்டிற்கான ஒரு புதிய அரசியல் தொடக்கமாக அமையும் என்று அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
