கனடாவில் சர்க்கரை ஆலை ஒன்றில் பணிபுரிவதாகக் கூறும் இந்திய வம்சாவளி யூடியூபரும் லாரி ஓட்டுநருமான பிரப்டீப் சிங், இணையத்தில் வைரலான வீடியோ ஒன்றில் பேசினார். அதில், கனடா முழுவதற்கும் சர்க்கரை விநியோகம் செய்யும் ஆலையில் தான் வேலை செய்வதாகவும், தனது அதிகாரத்தை நிலைநிறுத்த தினமும் ஒருமுறை வெறுங்காலுடன் சர்க்கரையின் மீது நடந்து செல்வதாகவும் சர்ச்சைக்குரிய வகையில் கூறினார். இந்த பேச்சு உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கேடு தொடர்பான கடுமையான கேள்விகளை எழுப்பியதுடன், சமூக வலைதள பயனர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
முன்னதாகக் கனடாவில் உள்ள ‘டிம் ஹார்டன்ஸ்’ சிற்றுண்டி உணவகத்தில் நபர் ஒருவர் மேஜை மீது கால்களை வைத்து அமர்ந்திருந்த சம்பவம் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. அந்த சர்ச்சையிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும், அதைவிடப் பெரிய சர்ச்சையைக் கிளப்பும் நோக்கத்திலுமே பிரப்டீப் சிங் இந்த வீடியோவை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. “அந்த நபரை விட்டுவிட்டு, இதைப்பற்றிப் பேசுங்கள்” என்று கூறி, வேண்டுமென்றே இணையத்தில் கவனத்தைப் பெற அவர் இவ்வாறு பேசியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
https://www.instagram.com/reel/DcMO8egxATv/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோ பரவியதை அடுத்து, கனடா உணவு ஆய்வு முகமையிடம் புகாரளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், பிரப்டீப் சிங் உண்மையில் சர்க்கரை ஆலையில் பணியாற்றுகிறாரா அல்லது சர்க்கரை மீது வெறுங்காலுடன் நடந்தாரா என்பதற்கு அதிகாரப்பூர்வமான எவ்வித சுயாதீன ஆதாரங்களும் சான்றுகளும் இல்லை. அதிகாரிகளும் இந்த சம்பவம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ விதிமீறலையும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
