ஜோலார்பேட்டையை அடுத்த ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் திருப்பதியில் பானிபூரி கடை நடத்தி வரும் அஜித்குமார் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். ஜெயக்குமாருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அஜித்குமாருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி அவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். நண்பர்களாகப் பழகி வந்த இவர்களுக்கு இடையே, ஜெயக்குமாரின் மனைவி சிவரஞ்சனியுடன் அஜித்குமாருக்கு ஏற்பட்ட பழக்கத்தால் மோதல் உருவானது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சிவரஞ்சனிக்கும் அஜித்குமாருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஜெயக்குமாருக்குத் தெரியவரவே, குடும்பத்தில் பெரும் விரிசல் ஏற்பட்டது. ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியும், சிவரஞ்சனியும் அஜித்குமாரும் தங்களது உறவைத் தொடர்ந்து வந்துள்ளனர். மேலும், அஜித்குமார் சிவரஞ்சனியுடனான தனிப்பட்ட வீடியோக்களை நண்பர்களுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படும் செயலால் ஜெயக்குமார் மிகுந்த மனவேதனைக்கு ஆளானார்.
இந்தச் சூழலில், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி ஜெயக்குமார் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், கடந்த சில தினங்களுக்கு முன்பு மொபட்டில் சென்றுகொண்டிருந்த ஜெயக்குமார் மீது திட்டமிட்டுத் தனது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த தண்ணீர் தொட்டி மீது மோதி நின்றதால் ஜெயக்குமார் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். அப்போது ஜெயக்குமாருக்கு அஜித்குமார் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் மற்றும் விவாகரத்து வழக்கால் ஏற்பட்ட முன்விரோதமே இந்தக் கொலை முயற்சிக்குக் காரணம் எனத் தெரியவந்தது. இதையடுத்து அஜித்குமாரை போலீசார் நேற்று கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பனின் மனைவியுடன் உறவு வைத்துக்கொண்டு, நண்பனையே கொலை செய்ய முயன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
