பெங்களூருவின் HSR லேஅவுட் பகுதியில் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள விசித்திரமான மேட்ச் மேக்கிங் நிகழ்ச்சி ஒன்று இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ‘பிம்ப் யுவர் பால்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில், பெண்கள் தங்களுக்குப் பிடித்தமான அல்லது தங்களுக்கு நன்கு தெரிந்த ஒரு ஆண் நண்பரை அழைத்து வந்து மற்ற பெண்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். ஆண்கள் நேரடியாகப் பங்கேற்க விண்ணப்பிக்க முடியாது; ஒரு பெண் அழைத்து வந்து சிபாரிசு செய்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதேவேளையில் பெண்கள் தனியாகவும் பங்கேற்கலாம்.
இந்த நிகழ்ச்சியின் பெயர் சர்ச்சைக்கும் விமர்சனத்திற்கும் உள்ளான நிலையில், இதன் அமைப்பாளர்களில் ஒருவரான ஜெய்தீப் சர்மா விளக்கம் அளித்துள்ளார். “டேட்டிங் ஆப்களில் தொடர்ந்து ஸ்வைப் செய்து அலுத்துப்போன இளைஞர்களுக்கு மாற்றாக, பெண்களின் கட்டுப்பாட்டிலும் முழுப் பாதுகாப்பிலும் இந்த அறிமுக நிகழ்ச்சி நடப்பதற்காகவே இப்படி ஒரு வித்தியாசமான விதியையும் பெயரையும் தேர்வு செய்தோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
