கிரிக்கெட் விளையாட்டின் போது தகராறு.. வெறும் ஒரு ரன்னுக்காக இப்படியா?… வாலிபர் செய்த கொடூர செயல்.. நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!!

By Muthu Mani on சித்திரை 9, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட சிறு வாக்குவாதம், ஒரு இளைஞனின் உயிரைப் பறித்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் அரிலோவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெடகடிலி பகுதியில், விடுமுறை தினமான ஏப்ரல் 5-ஆம் தேதி விநாயகா நகர் மற்றும் சக்கலிபேட்டை அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, பெடகடிலி அணியுடன் மோதத் திட்டமிடப்பட்டிருந்தது.

போட்டியின் போது ஒரு ரன் எடுப்பது தொடர்பாக இரு அணி வீரர்களிடையே திடீரென வாக்குவாதம் வெடித்தது. அப்போது நடுவராகப் பணியாற்றிய சிரஞ்சீவி என்பவர் நிலைமையைச் சீர்செய்ய முயன்றார். ஆனால், போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த பாக்சர் கிஷோர் என்பவர் தலையிட்டு நடுவரிடம் வீணாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தட்டிக்கேட்ட வீரர் டோலா அஜித் என்பவருக்கும் கிஷோருக்கும் இடையே கடும் மோதல் உருவானது. அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

   

மைதானத்தில் ஏற்பட்ட இந்த மோதல் அங்கேயே முடிந்துவிடவில்லை. அன்று மாலை விசாலாட்சி நகர் பகுதியில் அஜித் இருந்தபோது, அங்கு வந்த கிஷோர் மீண்டும் அவருடன் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற கிஷோர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஜித்தின் மார்பில் சரமாரியாகக் குத்தினார். இதனைத் தடுக்க முயன்ற நாகு என்ற மற்றொரு இளைஞருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அஜித், ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார்.

   

படுகாயமடைந்த அஜித்தை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அரிலோவா போலீசார், அஜித்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த பாக்சர் கிஷோரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சாதாரண விளையாட்டுப் போட்டி கொலையில் முடிந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.