ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் – காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக் இடைவெளியில் தவிர்க்கப்பட்டு, இளைஞர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வழிகாட்டிப் பலகையில் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் பைக்கை ஓட்டி வந்த இளைஞர், காற்றில் சுமார் 8 அடி உயரத்திற்குப் பறந்து தலைகீழாகக் குப்புற வந்து தரையில் விழுந்தார்.
இவ்வளவு பயங்கரமான விபத்தைக் கண்டவர்கள், அந்த இளைஞருக்குப் பலத்த காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டிருக்கும் என்று அஞ்சி ஓடி வந்தனர். ஆனால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், தரையில் விழுந்த அடுத்த நொடியே எந்தக் காயமும் இன்றி சுதாரித்து எழுந்த அந்த இளைஞர், சற்றும் பதற்றமின்றி இயல்பாகத் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த முழுச் சம்பவமும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “கடவுளின் அருளால் மட்டுமே இவர் உயிர்தப்பியுள்ளார்” என்றும், “அதிவேகம் ஆபத்தானது” என்றும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், புகழ்பெற்ற காடூ ஷ்யாம் கோயிலுக்குச் செல்லும் இச்சாலையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி வாகன வேகத்தைக் கட்டுப்படுத்தவும், சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்தவும் வேண்டும் என அப்பகுதி மக்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
