கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே.நாயுடு அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற மாணவன், சாதிய வன்கொடுமை மற்றும் அவமதிப்பு காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வகுப்பறையில் “நீ எஸ்.சி.யா, பீஃப் சாப்பிடுவீயா?” என்று கேட்டு ஆசிரியர் விஜயகுமார், தலைமை ஆசிரியர் அருண்குமார் மற்றும் சக மாணவர்கள் தன்னை இழிவுபடுத்தியதாகக் கூறி மாணவன் அகிலன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இரு ஆசிரியர்கள் மற்றும் இரு மாணவர்களும் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் இருவரையும் பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ள நிலையில், தலைமை ஆசிரியரைக் கைது செய்ய வலியுறுத்தி மாணவரின் பெற்றோர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வழக்கு குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கத் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
