மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் நான்கு மாணவர்கள் காயமடைந்த சோகமான சம்பவம் செவ்வாய்க்கிழமை மதியம் அரங்கேறியுள்ளது. யுனிவர்சல் உயர்நிலைப் பள்ளிக்குச் சொந்தமான அந்தப் பேருந்தில் மாணவர்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக பிருஹன்மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மும்பை தீயணைப்புத் துறைக்கு மதியம் 2:58 மணிக்குக் கிடைத்த தகவலின்படி, செம்பூர் 11-வது சாலையில் உள்ள ஹெரிடேஜ் பிரைட் அருகே இந்தப் விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த உடனே, அங்கிருந்த உள்ளூர்வாசிகள், பேருந்து நடத்துனர் மற்றும் மீட்புக் குழுவினர் இணைந்து துரிதமாகச் செயல்பட்டனர். பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 12 குழந்தைகளை அவர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.
இந்த விபத்தில் காயமடைந்த ஐந்து மாணவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள ஜென் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுள் நான்கு மாணவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், படுகாயமடைந்த 11 வயது சிறுவனான விஹான் ஸ்ரீவஸ்தவ், சிகிச்சை பலனின்றி மாலை 4:23 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
மிகப்பெரிய அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததற்கான சரியான காரணம் என்னவென்று இன்னும் கண்டறியப்படவில்லை. இந்தத் துயரச் சம்பவம் குறித்து மும்பை மாநகராட்சியும் காவல்துறையும் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. பள்ளிப் பேருந்து மீது மரம் விழுந்து சிறுவன் பலியான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
