மதுராந்தகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யையும் அவரது ஆட்சியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுகவுடன் அதிமுக கூட்டணி வைக்க முயன்றதாகக் கூறப்படும் தகவல்களை முற்றிலும் மறுத்த அவர், அது முற்றிலும் உண்மையற்றது என்றும் யார் சொன்னாலும் அது தவறானது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதிமுக சார்பில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் விஜய் மற்றும் திருமாவளவன் ஆகியோரிடம் ஆதரவு கோரும் சூழல் நிலவியதைச் சுட்டிக்காட்டிய தினகரன், தாராபுரத்தில் சத்தியபாமாவை அழ வைத்தது போல அடுத்து மதுராந்தகம் வேட்பாளரையும் அழ வைக்கக்கூடும் என்றும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களைக்கூட நடிப்புக்குத் தயார் செய்வதாகவும் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், ரீல்ஸ் மூலம் அதிகாரத்தைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகம் கடந்த மாத ஆட்சிக் காலத்தில் மக்களுக்கான நன்மைகளையும் செய்யவில்லை என்றும், நாட்டில் மின்வெட்டு மட்டுமே வெற்றிகரமாக நடப்பதாகவும் குற்றம்சாட்டினார். பதவிக்கு வந்தவுடன் அம்மா உணவகங்களைச் சீரமைத்துத் தரமான உணவு வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது உத்தரவு எந்த நிலையில் உள்ளது என்பதை இதுவரை நேரில் சென்று ஆய்வு செய்யவோ அதிகாரிகளிடம் கேட்டறியவோ இல்லை என்று சாடினார். மேலும், 630 அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்பட்டு விட்டதாக முதலமைச்சர் கூறிய கூற்று அடுத்த நாளே பொய் என அம்பலமாகிவிட்டதாகவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
