“டெல்லியில் நடந்த ரகசிய டீல்”… அமித்ஷாவிடம் டிடிவி தினகரன் போட்ட கண்டிஷன்… ஆடிப்போன எடப்பாடி….!

By Nanthini on தை 12, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ரகசியமாகச் சந்தித்துப் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. NDA கூட்டணியில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகுவதாக அறிவித்திருந்த தினகரன், தற்போது மீண்டும் அக்கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது. இந்தச் சந்திப்பின் போது, வரவிருக்கும் தேர்தலில் அமமுகவுக்குப் போதுமான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, இத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட அமித்ஷாவிடம் டி.டி.வி. தினகரன் 10 சட்டமன்றத் தொகுதிகளைக் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், சட்டமன்றத் தேர்தலில் கௌரவமான எண்ணிக்கையில் இடங்களைப் பெற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். அமமுகவின் இந்த நிபந்தனைக்கு பாஜக தலைமை தரப்பில் சாதகமான சிக்னல் கிடைத்துள்ளதாகவும், பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இருந்து இவை உள் ஒதுக்கீடாக வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

   

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கும் சூழலில், டி.டி.வி. தினகரனின் வருகை அதிமுக தலைமைக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. டி.டி.வி. தினகரனைப் பொறுத்தவரை, அதிமுக வாக்குகளைத் தென் மாவட்டங்களில் ஒருங்கிணைத்து வெற்றி பெறுவதே அமித் ஷாவின் வியூகமாக உள்ளது. எனினும், தொகுதிகள் ஒதுக்கீடு மற்றும் கூட்டணி குறித்த இறுதி முடிவுகள் ஜனவரி மாத இறுதி வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.