மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, டார்ஜிலிங் மாவட்டம் குர்சியோங் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அங்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களை மிரட்டும் வகையில் செயல்படும் சமூக விரோதிகள் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் குண்டர்கள் தங்கள் காதுகளைத் திறந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.
தேர்தல் களத்தில் வாக்காளர்களுக்கு ஏதேனும் தொந்தரவு விளைவித்தால், மே 5-ம் தேதிக்குப் பிறகு (தேர்தல் முடிவுகளுக்குப் பின்) சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் தலைகீழாகத் தொங்கவிடப்படுவார்கள் அல்லது சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்படுவார்கள் என்று அமித் ஷா பகிரங்கமாக எச்சரித்தார். மமதா பானர்ஜி அரசு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குவதாகவும், கோர்க்கா இன மக்களை வஞ்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், மமதா பானர்ஜி தனது மருமகனை முதலமைச்சராக்கக் கனவு காண்பதாகவும், ஆனால் அது ஒருபோதும் நனவாகாது என்றும் அவர் விமர்சித்தார். பாஜக வெற்றி பெற்றால் “வெளியாட்கள்” முதலமைச்சராவார்கள் என்ற மமதாவின் பிரசாரத்தைப் பொய் என்று குறிப்பிட்ட அவர், மேற்கு வங்க மண்ணில் பிறந்து, வங்க மொழியில் கல்வி பயின்ற ஒருவரே மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்பார் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
