“வேலுமணிக்கு கதவை மூடிய அமித்ஷா”… டெல்லியில் இருந்து வந்த ‘அந்த’ ஒரு போன் கால்… ஆடிப்போன கோவை தம்பி….!

By Nanthini on வைகாசி 25, 2026

Spread the love

தமிழக அரசியல் களம் தற்போது பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அதிமுகவின் எஃகுக் கோட்டையாகக் கருதப்பட்ட கோவை மாவட்டத்தில், அக்கட்சியின் முக்கிய புள்ளியான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மேற்கொண்ட சில அரசியல் நகர்வுகள், தற்போது அவரையே ஒரு இக்கட்டான சூழலில் தள்ளிவிட்டுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தருவதாகக் கூறி, இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வேலுமணி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். கட்சியையும் உடைக்க முயன்ற வேலுமணியின் இந்த அதிரடித் திட்டம், ‘அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக’ மாறிவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தன்னிடம் 25 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக வேலுமணி காட்டிக்கொண்டாலும், கட்சியின் நிர்வாக அதிகாரம் இன்னும் முழுமையாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதால் அவரால் நினைத்ததைச் சாதிக்க முடியவில்லை. மேலும், இந்த எம்.எல்.ஏ.க்களைப் பற்றிய ஆதாரங்களுடன் கூடிய புகாரை சபாநாயகரிடமும் ஆளுநரிடமும் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே வழங்கிவிட்டார். இதனால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இவர்களின் பதவிகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த எம்.எல்.ஏ.க்களை விஜய் நேரடியாகச் சந்தித்துப் பேசிய விவகாரம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வழக்கின் பாணியில் சி.பி.ஐ. வசம் சென்றால், அது விஜய்க்கே சட்ட ரீதியான சிக்கலாக மாறக்கூடும் என்றும், இவர்களை அமைச்சராக்க முடியாது என்று ஆளுநரே திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

   

மறுபுறம், இத்தகைய கடுமையான உள்நாட்டு நெருக்கடிகளுக்கு மத்தியில், டெல்லியின் ஆதரவும் வேலுமணிக்குத் தாராளமாகக் கிடைக்கவில்லை என்பது அவருக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடியைச் சந்திக்க வேலுமணி எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. “மேற்கு வங்கம், அசாம் தேர்தல் களைப்பில் உள்ளோம், இப்போது தொந்தரவு செய்யாதீர்கள்” என்று டெல்லி தலைமை கைகழுவி விட்டதோடு, அதிமுகவில் ஒற்றுமையாக இருந்து எடப்பாடி பழனிசாமி சொல்வதைக் கேட்டு நடக்குமாறு அறிவுறுத்தியிருப்பது வேலுமணிக்கு விழுந்த பேரிடியாகக் கருதப்படுகிறது.

   

சுயலாபத்திற்காகவும் அரசியல் இருப்புக்காகவும் வேலுமணி தரப்பு கையாண்ட அதிரடித் திட்டங்கள் அனைத்தும் தற்போதைய சூழலில் கானல் நீராக மாறிப்போயுள்ளன. எடப்பாடியின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதை விட, அவரிடம் சமரசம் செய்துகொள்வதே தங்களது அரசியல் வாழ்வுக்குச் சிறந்த வழி என்பதை வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலர் உணரத் தொடங்கியுள்ளனர். ஆகமொத்தம், இந்த உட்கட்சி பூசல் தற்காலிகமாக எடப்பாடி பழனிசாமிக்குச் சாதகமாகவே முடிந்துள்ள நிலையில், இனி எடப்பாடியை அமைதிப்படுத்தி கட்சிக்குள் தனது செல்வாக்கை மீட்டெடுக்கும் நோக்கில் மட்டுமே வேலுமணியின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையக்கூடும் என்று அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.