“சித்தன் போக்கு சிவன் போக்கு?”… இனிமேல் பொறுக்க முடியாது…. அமித்ஷாவுக்கு அவசரமாகப் பறந்த ‘ரகசிய’ கடிதம்… முதல்வருக்கு காத்திருக்கும் ஷாக்….!

By Nanthini on ஆடி 7, 2026

Spread the love

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, முதலமைச்சராக என்.ரெங்கசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் பாஜகவின் நமச்சிவாயம் உள்ளிட்ட அமைச்சர்களும் பதவியேற்றனர். ஆனால், ஆட்சி அமைந்து 50 நாட்களுக்கு மேலாகியும் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் (துறைகள்) ஒதுக்கப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது. குறிப்பாக, புதிய அமைச்சர்களைத் தேர்வு செய்வதிலும், குறிப்பிட்ட நபர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதிலும் முதலமைச்சர் ரெங்கசாமிக்கும் பாஜக தலைமைக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளே இந்தத் தாமதத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த அதிகாரப் பகிர்வு மோதலால் புதுச்சேரி அரசு நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. அமைச்சர்கள் துறைகள் இல்லாததால் எந்தவொரு மக்கள் நலப்பணிகளையும் மேற்கொள்ள முடியாமல், வெறும் பெயரளவிற்கே தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், அமைச்சரவைக் கூட்டங்கள் கூட்டப்படாததோடு, நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஆரம்பக்கட்ட ஆயத்தப் பணிகளோ அல்லது துறை சார்ந்த ஆய்வுப் பணிகளோ கூட இதுவரை தொடங்கப்படாமல் முடங்கியுள்ளன.

   

முதலமைச்சரின் இந்தத் தனிச்சோக்கான செயல்பாடுகளால் பாஜக அமைச்சர்கள் மட்டுமன்றி, அவரது சொந்தக் கட்சியின் அமைச்சர்களும் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண முடியாமல் அமைச்சர்கள் தவித்து வரும் நிலையில், அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சீர்குலைவு குறித்து புதுவையின் பாஜக அமைச்சர் நமச்சிவாயம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முறைப்படி புகார் வாசித்துள்ளார்.

   

அமித் ஷாவுக்கு அனுப்பியுள்ள அந்தப் புகாரில், 50 நாட்களாக இலாகாக்கள் ஒதுக்கப்படாத கேலிக்கூத்தையும், பட்ஜெட் தயாரிப்பில் நிலவும் அலட்சியத்தையும் சுட்டிக்காட்டியுள்ள நமச்சிவாயம், மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சருக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து, துறைகளை ஒதுக்கீடு செய்ய வைத்தால் மட்டுமே புதுவை நிர்வாகம் சீராகும் என அவர் கோரியுள்ளார். இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் இதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதால், இந்த வாரத்திற்குள் புதுவை அரசியலில் நல்லதொரு திருப்பம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் அமைச்சர்கள் காத்திருக்கிறார்கள்.