தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பா.ம.க.வில் தந்தை மற்றும் மகன் என இரு அணிகளாகப் பிரிந்து செயல்படும் சூழலில், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் இணைந்துவிட்டது. இதனால் தனித்து விடப்பட்ட டாக்டர் ராமதாஸ் அணி, தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து ஆலோசித்து வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க கூட்டணியில் இணைய டாக்டர் ராமதாஸ் தரப்பு ஆர்வம் காட்டிய போதிலும், அக்கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி முற்றுப்பெற்றதாகத் தெரிகிறது. இந்நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க) கூட்டணி அமைப்பது குறித்து டாக்டர் ராமதாஸ் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறார். இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் த.வெ.க-வுடன் கூட்டணி அமைப்பது குறித்தும், அதற்கான தொகுதிப் பங்கீடுகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய தகவல்களின்படி, த.வெ.க கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் அணிக்கு சுமார் 35 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகுதிகளில் போட்டியிடக்கூடிய முக்கிய வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ஜி.கே.மணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசித்து வருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் முறையான கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழக தேர்தல் களம் புதிய திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
