தமிழக அரசியலில் தவெகவின் (தமிழக வெற்றிக் கழகம்) வரவும், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் ஏற்படுத்திய அதிரடிகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. தவெகவுக்கு சில அதிமுக எம்.எல்.ஏக்கள் தாவியதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவிருக்கிறது. இந்தச் சூழலில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் பேசியுள்ள கருத்து, தமிழக அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அவர் முன்வைத்துள்ள யோசனை, விவாத மேடைகளில் தற்போதைய பேசுபொருளாக மாறியிருக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தன. இந்த அரசியல் நகர்வுதான் தற்போதையப் பிரச்னைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது எனலாம். திமுகவும் அதிமுகவும் திரைமறைவில் கைகோர்த்து புதிய அரசியல் வியூகம் வகுப்பதாக, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. எனினும், இவை வெறும் வதந்திகள் என்றும், தாங்கள் மக்களின் தீர்ப்பை முழுமையாக மதிப்பதாகவும் திமுக தலைமை ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தது.
இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு நடுவேதான், சுப.வீரபாண்டியனின் பேச்சு இந்த விவகாரத்தை மேலும் சூடாக்கியுள்ளது. “திமுகவும் மதிமுகவும் பிரிந்து இருந்துவிட்டுப் பிறகு இணையவில்லையா? அப்படி இருக்கும்போது எடப்பாடி பழனிசாமி மட்டும் என்ன தீண்டத்தகாதவரா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திமுகவும் அதிமுகவும் அடிப்படையில் ஒரே கொள்கைக் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பிகள் போன்றவர்கள் என்றும், தற்காலிகமாக வேறு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துவிட்டு வருந்துவதை விட, இரு கட்சிகளும் தனித்தன்மையுடன் இருந்துகொண்டே இடைத்தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதுதான் தற்போதைய சூழலில் வலிமையான முடிவாக இருக்கும் என்றும் அவர் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
சுப.வீயின் இந்த அதிரடித் திட்டம் தற்போதைய அரசியல் சூழலில் ஆதரவுக் குரல்களையும் அதே சமயம் கடுமையான எதிர்ப்புகளையும் ஒருசேரப் பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகள், தங்களின் சந்தேகத்தை சுப.வீயின் பேச்சு உறுதிப்படுத்தி இருப்பதாகக் கூறி விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. மறுபுறம், கொள்கை ரீதியாக இரு திராவிடக் கட்சிகளும் இணைவதில் என்ன தவறு என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. அவசரப்பட்டுச் சொல்லப்படும் கருத்தாக இது பார்க்கப்பட்டாலும், வரவிருக்கும் இடைத்தேர்தல் களம் இந்த ‘அண்ணன்-தம்பி’ பாசப் போராட்டத்தால் ஒரு புதிய திருப்பத்தை நோக்கி நகர்வது மட்டும் நிச்சயம்.
