டெல்லியில் நடைபெற்ற ‘இண்டியா’ கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்து டெல்லி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர்களில் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களான சரத் பவார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கடந்த காலங்களில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸுக்கு எதிராகத் தெரிவித்த காட்டமான விமர்சனங்களே அச்சிடப்பட்டிருந்தன. இந்த போஸ்டர்களைத் தயாரித்து ஒட்டியது யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.
அதே வேளையில், இண்டியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல்களும் இந்த சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளதால் அதிருப்தியடைந்த திமுக, இந்த இண்டியா கூட்டணிக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. மேலும், காங்கிரஸ் ஒரு “நம்பிக்கையற்ற கட்சி” என்றும், அதன் செயல்பாடுகளால் மற்ற கட்சிகளும் கூட்டணியை விட்டு வெளியேறும் என்றும் திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மறுபுறம், இண்டியா கூட்டணியில் ஒற்றுமை நீடிப்பதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி நேரில் பங்கேற்றார், உத்தவ் தாக்கரே காணொளி வாயிலாகக் கலந்துகொண்டார். மொத்தம் 23 அரசியல் கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் நம்பிக்கை தெரிவித்திருந்தாலும், இந்த போஸ்டர் சர்ச்சை மற்றும் திமுகவின் புறக்கணிப்பு ஆகியவை எதிர்க்கட்சிக் கூட்டணியில் பெரும் குழப்பத்தையும் அரசியல் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
