ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில், 11 மற்றும் 12 வயதுடைய இரு மாணவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 23 வயதான அஃபினா சிமியோனிடிஸ் என்ற ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவர்களைத் தனது ‘கணவர்கள்’ எனக் கூறி அவர்களுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பியதுடன், தனது வீட்டில் நடைபெற்ற சிறப்புப் பயிற்சி வகுப்புகளின் போது அவர்களுடன் பாலியல் உறவிலும் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன் நேரடியாகக் காவல் நிலையம் சென்று புகாரளித்ததைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள அந்த ஆசிரியைக்கு மனநலப் பரிசோதனை நடத்தப்பட்டதில், அவருக்கு எவ்வித மனநலக் பாதிப்பும் இல்லை என்றும் அவர் விசாரணையை எதிர்கொள்ளத் தகுதியானவர் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. முன்னதாக 2024-ல் அதிபர் புதின் கையொப்பமிட்ட விருதைப் பெற்ற இந்த ஆசிரியை தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையில், அங்குள்ள நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
