சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பதுதான் பலரின் கனவாக இருக்கிறது. இந்த கனவை நினைவாகும் விதமாக பல திட்டங்கள் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு கூலித்தொழிலாளிகள் சொந்த தொழில் தொடங்க கலைஞர் கைவினை திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதன் விவரங்களைப் பற்றி இனி காண்போம்.

தமிழ்நாட்டில் உள்ள கைவினை கலைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் கைவினை கலைஞர்களை தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் நோக்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தும் அரசாணையை அறிவித்திருக்கிறார். இந்த திட்டத்தில் குடும்பத் தொழில் அடிப்படையில் இல்லாமல் 25 கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் பயனடையலாம். இந்த திட்டத்தின் மூலம் புதிய தொழிலை தொடங்குவதற்கும் செய்யும் தொழிலை நவீன வடிவில் விரிவாக்கம் செய்யவும் கடன் உதவிகளும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கலைஞர் கைவினை திட்டத்தில் அதிகபட்சமாக ரூபாய் 50000 வரை 25% மானியத்துடன் கூடிய ரூபாய் 3 லட்சம் கடன் உதவியும் 5 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளும் இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் விண்ணப்பதாரர்கள் மரவேலைப்பாடுகள், படகு தயாரித்தல், உலோக வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், சிற்ப வேலைபாடுகள், கற்சிலை வடித்தல், கண்ணாடி வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், சுடுமண் வேலைகள், கட்டட வேலைகள், கூடை முடிதல், கயிறு பாய் பின்னுதல், துடைப்பான்கள் செய்தல், பொம்மைகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், மீன்வலை தயாரித்தல், தையல் வேலை, நகை செய்தல், சிகை அலங்காரம் மற்றும் அழகு கலை, இசைக்கருவிகள் தயாரித்தல் ஆகியோர் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும்.
இது தவிர துணி நெய்தல் மற்றும் துணிகளில் கலைவேலைப்பாடுகள் செய்தல், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சடித்தல், பாசிமணி வேலைப்பாடுகள், மூங்கில் சணல் பனை ஓலை பிரம்பு வேலைபாடுகள், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 25 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10,000 கைவினை கலைஞர்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் கைவினை கலைஞர்கள் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்களை மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர்கள் தலைமையில் உள்ள குழு சமர்ப்பித்து வங்கிக்கு பரிந்துரைப்பார்கள். ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு உடனடியாக கடன் உதவி மானியத்துடன் வழங்கப்படும். தொழிலாளர்களும் தொழில் முனைவராக ஆகலாம் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளது.
