இன்று (மே 2, 2026) நாடு முழுவதும் செல்போன்களுக்கு அதிக சத்தத்துடன் எச்சரிக்கை குறுஞ்செய்திகள் வரக்கூடும் என்பதால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது செல் பிராட்காஸ்ட் (Cell Broadcast) அமைப்பின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் சோதனை முயற்சி மட்டுமே என்றும், இதற்கு பொதுமக்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மழை, வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களை முன்கூட்டியே எச்சரிப்பதற்காக இந்த செல் பிராட்காஸ்ட் சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவையை நாடு முழுவதும் இன்று சோதனை செய்வதாகத் தெரிவித்துள்ள ஆணையம், அவசர காலங்களில் தகவல்களை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதை உறுதி செய்யவே இச்சோதனை நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
