நேருக்கு நேர் ஷூட்டிங்கின் போது மணிரத்னத்துக்கு தண்ணி காட்டிய அஜித்… பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்!

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

ஆசை படத்துக்குப் பிறகு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் நேருக்கு நேர் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் அஜித். அந்த படத்தை இயக்குனர் மணிரத்னத்தின் ஆலயம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. படத்தின் ஷூட்டிங் தொடங்கி அஜித் 10 நாட்கள் வரை இந்த படத்தில் நடித்தும் இருந்தார்.

   

ஆனால் அதன் பிறகு அவர் அந்த படத்தில் இருந்து விலகினார் அல்லது நீக்கப்பட்டார். இதுபற்றி பலவிதமான தகவல்கள் தமிழ் சினிமா உலகில் பரவி வருகின்றன. இந்நிலையில் ஆசை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிபாரதி அந்த சம்பவம் பற்றி ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் அவர் பேசிய நேர்காணலில் “அந்த படத்தில் அஜித் 8 நாட்கள் நடித்தார். அதன் பிறகு அவர் திடீரென்று காணாமல் போய்விட்டார். எத்தனை முறை போன் செய்தாலும் அவர் எடுக்கவில்லை. இதனால் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. ஆனாலும் அவரைப் பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து சுஹாசினி மேடம் அவருக்கு போன் செய்ததும் அவர் எடுத்தார். அப்போது மணிரத்னம் உங்களை சந்திக்க வேண்டும் என விரும்புகிறார் என சொல்கிறார் என்று கூறியதும் நாளை வந்து சந்திக்கிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால் சொன்னது போல அன்று அஜித் வரவில்லை. மணிரத்னம் சார் 2 மணிநேரம் வரை காத்திருந்தார். ஆனால் அஜித் கடைசிவரை வரவேயில்லை.  அதன் பிறகுதான் அஜித்தை நீக்கிவிடலாம் என்ற முடிவை எடுத்தார். இதற்கு இயக்குனர் வசந்த் தயங்கினார். அதற்கு மணிரத்னம் எவ்வளவு செலவு ஆகி இருந்தாலும் பரவாயில்லை. நான் ஏற்றுக்கொள்கிறேன் எனக் கூறி அந்த முடிவை எடுத்தார்” எனக் கூறியுள்ளார்.