சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிநவீன ‘ஏர் டாக்ஸி’ சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டங்கள் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், 2028-ஆம் ஆண்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இது முழுமையாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் இந்த டாக்ஸிகள், சத்தம் இல்லாமல் செங்குத்தாக எழும்பி பறக்கும் திறன் கொண்டவை. ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 300 முதல் 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
சென்னையில் விமான நிலையம், கிளாம்பாக்கம், ஐடி காரிடார் மற்றும் முக்கிய மருத்துவமனைகளை இணைக்கும் வகையில் இதற்காகத் தனித்தனியாக ‘வெர்டிபோர்ட்’ (Vertiport) தளங்கள் அமைக்கப்பட உள்ளன. ஐஐடி மெட்ராஸின் ஸ்டார்ட்அப் நிறுவனம் மற்றும் சில முன்னணி நிறுவனங்கள் இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்த உள்ளன. போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், பல மணி நேரப் பயணத்தை வெறும் சில நிமிடங்களில் கடக்க உதவும் இந்தத் திட்டம், சென்னையின் பயண முறையையே மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
