தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. இந்த முறை எப்படியாவது அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற சிந்தனையில் இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஆனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று பாஜக சொல்லிக் கொண்டிருக்க ஈபிஎஸ் தான்தான் முதல்வர் வேட்பாளர் என மறுபக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதேசமயம் கூட்டணி வேண்டுமா, வேண்டாமா என்பதை தாங்கள்தான் முடிவு செய்வோம் என்றும் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் கூட்டணி ஆட்சி என்று பாஜகவினரும் தனித்து ஆட்சி என்று அதிமுகவினரும் கூறி வருகிறார்கள். இதனால் அதிமுக மற்றும் பாஜக இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது.
இப்படியான நிலையில் நேற்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, அதிமுகவில் மூத்தலைவர்கள் பலர் அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்திருந்தார். குறிப்பாக பாஜக மற்றும் அதிமுக கூட்டணியால்தான் தோல்வி அடைந்தேன் என முன்னதாக கூறியிருந்த முக்கிய தலைவர் உட்பட பலர் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் பலர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் ஐக்கியமாக வாய்ப்புள்ளது.
