சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு முக்கிய விவாதம் எழுந்துள்ளது. அதில், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராகக் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் நியமிக்கப்பட வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் சிலர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. கட்சியின் இந்த உட்கட்சி நகர்வு அதிமுக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
வாரிசு அரசியல் என்ற விமர்சனத்திற்கு வழிவகுக்கும் இந்த கோரிக்கைக்கு, அதிமுகவின் தற்போதைய தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் ராஜ் சத்யன் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர், “அரசியலில் இல்லாதவர்களையும், கழகப் பொதுச்செயலாளரின் குடும்பத்தினரையும் தொடர்ந்து கட்சியின் அரசியல் விவாதத்திற்குள் இழுக்க ஒரு முயற்சி நடக்கிறது. இதன் மூலம் கழகத்திற்கு எதிராக ஒரு தவறான சூழலை உருவாக்கப் பார்க்கிறார்கள். அது சமூக வலைதளம் தொடங்கி, பத்திரிகை மற்றும் ஊடக விவாதங்கள் வரை தற்பொழுது வளர்ந்து நிற்பது வேதனைக்குரியது” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், சமீபத்திய தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் அதன் பின்னர் நடந்த உட்கட்சி நிகழ்வுகளால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “எங்களுடைய உழைப்பைக் குறைத்துச் சொல்லிக் கொச்சைப்படுத்துவது என அதிமுக தொண்டர்களும், அடுத்த தலைமுறையினரும் ஏற்கனவே பல வலிகளைச் சுமந்து வருகிறோம். இந்த இக்கட்டான நேரத்திலும் கூட, இதுபோன்ற தேவையற்ற விஷயங்கள் எங்கே பேசப்பட்டிருந்தாலும் அது முற்றிலும் தவறுதான்” என ராஜ் சத்யன் மிக ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.
