கோபிசெட்டிபாளையம் அதிமுக நிர்வாகி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தரப்பினர் கட்டாயப்படுத்தி கட்சி பதவியை ராஜினாமா செய்ய வைத்ததாக பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். எடப்பாடிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு கடந்த ஐந்தாம் தேதி எடப்பாடிக்கு கெடுவைக்கும் அளவிற்கு மாறியது. அதைத்தொடர்ந்து செங்கோட்டையன் வகுத்து வந்த கழக அமைப்புச் செயலாளர், புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவி, அவருடைய ஆதவாளர்கள் வைத்து வந்த ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வந்த முன்னாள் எம்பி சத்திய பாமா உள்ளிட்ட ஒன்பது பேருடைய கட்சி பதவிகள் பறிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக இருந்த 2000 கும் மேற்பட்டோர் கட்சி பதவிகளை ராஜினாமா செய்தார்கள். இந்த நிலையில் இன்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் செந்தில் பாலாஜி ,”எடப்பாடி யாரை காட்டுகிறாரோ அவரை வெற்றி பெற வைக்க பாடுபடுவோம். அனைவரும் முழு மனதோடு எடப்பாடியின் தலைமையில் பணியாற்ற விரும்புகிறோம். கட்சியிலிருந்து யாரும் ராஜினாமா செய்யவில்லை. ஆனால் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள். கட்சி அலுவலகத்திற்கு வரவைத்து ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கினார்” என்று பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
