கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடிவேல் நகரில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், உளுந்தூர்பேட்டை தொகுதி வேட்பாளரும் மாவட்ட செயலாளருமான குமரகுரு கலந்துகொண்டு பேசினார். அப்போது அதிமுக நிர்வாகிகள் அல்லது தொண்டர்கள் யாராவது திமுகவினருடன் ரகசியமாகத் தொடர்பு வைத்துக்கொண்டால், அவர்களைத் துரோகிகளாகக் கருதி நானே நேரடியாக அந்த ஏரியாவுக்கு வந்து அவர்களின் “கையை உடைப்பேன், கையை வெட்டுவேன்” என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். இவரின் இந்த வன்முறையைத் தூண்டும் வகையிலான பேச்சு கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
குமரகுருவின் இந்த மிரட்டல் பேச்சு அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், “என்னப்பா, இவர் சினிமா வில்லன்களை மிஞ்சும் அளவுக்குப் பெரிய ரவுடியாக மாறிவிட்டாரே?” என விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, நகைச்சுவை நடிகர் வடிவேலு சினிமாவில் அட்ரஸ் கேட்டு மிரட்டுவது போலவே, குமரகுருவும் “நானே ஏரியாவுக்கு வருவேன்” என எகிறியதை மீம்ஸ்களாகப் பதிவிட்டு இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி, ஒரு வேட்பாளரே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியிருப்பது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குமரகுரு தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே சீட் வழங்கியதாகக் கட்சிக்குள்ளேயே அதிருப்தி நிலவி வரும் சூழலில், தற்போது தொண்டர்களை மிரட்டும் வகையில் அவர் பேசியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
