அதிமுக முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்டத்தின் முக்கியப் புள்ளியுமான நிலோபர் கபில், வரும் 14-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட இவர், மீண்டும் கட்சியில் இணைந்தும் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படாததால் அதிருப்தியில் இருந்து வந்தார். குறிப்பாக, கட்சித் தலைமை கே.சி.வீரமணிக்கே முன்னுரிமை அளிப்பது அவரை இந்த முடிவை நோக்கித் தள்ளியுள்ளது.
ஜோலார்பேட்டை பொன்னேரியில் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறவுள்ள திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடிக் குழுவினர் பயிற்சி மாநாட்டில், முதலமைச்சர் முன்னிலையில் நிலோபர் கபில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணையத் திட்டமிட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் நிலோபரின் இந்த நகர்வு அதிமுகவுக்குப் பின்னடைவாகவும், திமுகவுக்கு கூடுதல் பலமாகவும் பார்க்கப்படுகிறது.
தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து ஆளுங்கட்சியான திமுகவில் இணைந்து வருவது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நிலோபர் எடுத்துள்ள இந்த முடிவு, வட மாவட்ட அரசியல் சமன்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
