அகமதாபாத் விமான விபத்து நாடு முழுவதும் ஏற்படுத்திய சோகம் இன்னும் தனியவில்லை. அதேசமயம் விபத்திற்கான சரியான காரணம் குறித்தும் இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை. இப்படியான நிலையில்தான் விமானம் கீழே விழுந்து நொறுங்குவதற்கு முன்பாக கடைசி நொடியில் விமானி கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிய தகவல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி “Thrust not achieved”, “falling”, “Mayday” எனும் வார்த்தைகளை தான் விமானி கடைசியாக உச்சரித்துள்ளார். அதாவது, ”எதிர்பார்த்த உந்துதல் சக்தியை அடையமுடியவில்லை”, ”வீழ்ச்சி”, அவசர காலத்திற்கான “மேடே” குறியீடு ஆகியவற்றை தான் விமானி கடைசியாக உச்சரித்துள்ளார். இந்த நேரத்தில் இருதரப்புக்கும் இடையேயான தொலைதொடர்பும் பலவீனமாகவே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் MAYDAY, MAYDAY.. NO POWER, NO THRUST, GOING DOWN என விபத்துக்கு முன் விமான கட்டுப்பாட்டு மையத்திற்கு அவசர கால உதவி கோரி பைலட் தகவல் அனுப்பியுள்ளார். தற்போது கருப்பு பெட்டியும் கிடைத்திருக்கும் நிலையில் அதன் தரவுகள் கிடைக்க இன்னும் 15 நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் விமான விபத்துக்கு காரணமாக இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது தான் என்றும் சிஸ்டம் செயலிழந்து எரிபொருள் குறைவு போன்றவை எஞ்சின் செயல் இழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்றும் இதனால் விமானம் டேக் ஆஃப் ஆக முடியாமல் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்றும் முன்னாள் கேப்டன் அலோக் சிங் தெரிவித்துள்ளார்.
