ஜெயலலிதா காலத்திற்குப் பிறகுப் பல்வேறு பிரிவுகளாகச் சிதறிக்கிடக்கும் அதிமுகவில், தற்போது மீண்டும் அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர்களாகவும், அவரது ஆட்சிக்காலத்தில் வலது, இடது கரங்களாகச் செயல்பட்ட எஸ்பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பினர், தற்போது அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். எடப்பாடியைத் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கும் நோக்கில், அவர்கள் சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்பு சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அதிமுகவிலிருந்து நீக்குவதற்கு முக்கியக் காரணமாக இருந்த வேலுமணி – சண்முகம் அணியினரே, தற்போது அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்துவது பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. வேலுமணியின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களும், நத்தம் விஸ்வநாதன், கே.பி. அன்பழகன் போன்ற மூத்த தலைவர்களும் சசிகலாவைச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. சசிகலா உள்ளே வந்தால் எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு சரிந்துவிடும் என்பதே இவர்களின் கணிப்பாக உள்ளது.
ஆனால், தன்னைத் தொடக்கத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு தற்போது சுயநலத்திற்காக அணுகும் தலைவர்களின் பேச்சை உடனடியாக நம்ப சசிகலா தயாராக இல்லை. “முன்பு நான் அழைத்தபோது வராமல், எடப்பாடியுடன் சேர்ந்து என்னை ஒதுக்கிய நீங்கள், இப்போது வருவது எந்த வகையில் நியாயம்?” என்று கேள்வியெழுப்பியுள்ள அவர், கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைத்துத் தலைவர்களையும் முதலில் ஒன்று சேர்க்குமாறு திட்டவட்டமாகக் கூறியதாகத் தெரிகிறது. இதன் மூலம் தான் மீண்டும் கட்சிக்குள் நுழைய வலுவான சூழலை உருவாக்க அவர் திட்டமிடுகிறார்.
இதற்கிடையே, வேலுமணி தரப்பின் திட்டத்தை அறிந்த எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன், அவர்களுக்கு முன்பாகவே சசிகலாவைச் சந்தித்துப் பேசியதாகக் தகவல்கள் கசிந்துள்ளன. வேலுமணி அணியினரின் பேச்சைக் கேட்க வேண்டாம் எனக் கூறிய மிதுனிடம், தன்னை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றியதைச் சுட்டிக்காட்டி சசிகலா கோபத்தை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. எது எப்படியிருப்பினும், எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை வீழ்த்த சசிகலாவை ஒரு முக்கியத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தச் சில மூத்த தலைவர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருவது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
