தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு பக்கம் தேர்தல் பிரச்சாரம் மறுபக்கம் கூட்டணி பேச்சு வார்த்தை என மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. அதேசமயம் அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் கரூர் விவகாரத்தில் சிக்கிய விஜய்க்கு ஆதரவாக அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் செயல்பட்டன. சமீபத்தில் கரூர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஜயை தங்கள் பக்கம் இருக்கும் முயற்சியில் தொடர்ந்து இபிஎஸ் ஈடுபட்டு வருகின்றார்.
சமீபத்தில் கூட தேர்தல் பிரச்சாரத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டதாக அவர் சூசகமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் கரூர் விவகாரத்தை அதிமுக கூட்டணிக்காக பயன்படுத்துகிறது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியது அரசியல் களத்தை தீவிரமாக்கியுள்ளது. கூட்டணிக்காக அல்ல தமிழக மக்கள் என்பதால் பேசுகிறோம் என்று இபிஎஸ் பதிலடி கொடுத்தார். ஆனால் முதல்வரே அதுவும் பேரவையில் இந்த விவகாரத்தை பேசியதால் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் இடையே மறைமுக கூட்டணி பேச்சு நடப்பதை உறுதி செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
